மதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பான வழக்கு, கொலை மற்றும் எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மேலும் மானாமதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மானாமதுரை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
என் மகன் ஆகாஷ் டெலிசன் (26) மற்றும் அவரது நண்பர் குணா உள்ளிட்ட சிலர் மார்ச் 6 அன்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் அழகர் மற்றும் ஜெயக்குமார் காயமடைந்தனர்.
ஆகாஷ் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போலீசார் தாக்கியதால் அவரது வலது காலில் காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினார்.
மார்ச் 8 அன்று ஆகாஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினார்.
அரசு தரப்பு விளக்கம்
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஆகாஷ் டெலிசன் மீது சில வழக்குகள் உள்ளன. ரவுடிகள் சரித்திரப் பதிவேட்டிலும் அவரது பெயர் உள்ளது.
மது போதையில் ஏற்பட்ட தகராறில் அழகர் மற்றும் ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
அவரை கைது செய்ய முயன்றபோது பாலத்திலிருந்து கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையில் மானாமதுரை மதுரை–ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பு
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது மானாமதுரை நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில், சீருடையில் இல்லாத 10 பேர் தன்னை பிடித்து காலின் கீழ் கற்கள் வைத்து ஈரமான சாக்கு போட்டு இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததாக சொல்லும்படி போலீசார் மிரட்டியதாகவும் தெரிவித்ததாக கூறப்பட்டது.
நீதிபதி உத்தரவு
ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பாக எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைதி குழு அமைக்கப்பட்டது.
அதில் வழக்கறிஞர்கள் சாமிதுரை, மயில்வாகன ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கம் நியமிக்கப்பட்டனர்.
நான்கு வழிச்சாலையில் போராட்டத்தை கைவிட்டு மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே அமைதியாக போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
வழக்கு பதிவு
பின்னர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து, குற்றச்சாட்டுகளில் மாற்றம் செய்து பி.என்.எஸ். பிரிவு 103 (கொலை) மற்றும் எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்றம் கருத்து
நான்கு வழிச்சாலையில் நடந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருப்பினும் அது முழுமையான உரிமை அல்ல. மற்றவர்களின் உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு போராட்டத்தின் நோக்கம் நியாயமானதாக இருந்தாலும் அது பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து வெளியேறி, மானாமதுரை பழைய பஸ் நிலையம் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என்றும் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து போராட்டக்காரர்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அமைதி குழு உறுப்பினர்களின் பணியை நீதிமன்றம் பாராட்டியது.
இந்த வழக்கின் விசாரணை மார்ச் 13க்கு ஒத்திவைக்கப்பட்டது.
