தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் தடயவியல் ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி மார்ச் 10ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில் வீட்டின் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் முன்தினம் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும், புகாரை உடனடியாக பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மாணவி மாயமானபோது பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்தவர்கள் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற பெற்றோரிடம் இன்ஸ்பெக்டர் பிரவீனா அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், மாணவி குறித்து தவறாக பேசியதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பிரவீனாவை இடைநீக்கம் செய்து திருநெல்வேலி டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவிட்டார்.
மாணவி கொலை தொடர்பாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் 20 பேரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
ஆனால் இதுவரை முக்கிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் விசாரணை சிக்கலாக உள்ளது.
மது அருந்தியவர்கள், மாணவியின் உறவினர்கள் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மாணவி கொலை சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தின் போது மாணவியின் சகோதரி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல் காரணமாக தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதற்கிடையில் மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மாணவியின் கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் தாக்குதல் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் கண் மற்றும் உதடு பகுதியில் பலத்த காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய திருநெல்வேலியில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த அறிக்கை வந்த பிறகே முழுமையான தகவல் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் வாபஸ்
மாணவியின் உடல் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தற்போது மாணவியின் உடல் தடயவியல் ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
