புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலவரம் குறித்து பேசினார்.
மேற்காசியாவில் போர் பதற்றம் நீடித்து வருவது பல உலக நாடுகளையும் பாதித்து வருகிறது.
இந்த சூழலில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அப்பகுதியில் நிலவும் போர் நிலைமை மற்றும் பொதுமக்களுக்காக எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இந்தியாவின் முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரான் அதிபருடன் நடந்த பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் பேசும்போது அந்த பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
அங்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் குறித்து என் ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன்.
மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்.
பிரச்னைகளுக்கு போர் தீர்வு அல்ல. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈரானில் சுமார் 9 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
