பெரம்பூர்: தி.மு.க. நிர்வாகிகள் அதிகாரிகள் ஆதரவுடன் பண பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக, பெரம்பூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திலகபாமா பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி 44வது வார்டு பகுதிக்குள், கார் ஒன்றில் பணம் பதுக்கி வைத்து பட்டுவாடா நடைபெறுகிறது என திலகபாமாவிற்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவர், அப்பகுதி தி.மு.க. கவுன்சிலரின் வீட்டில் சுமார் ₹5 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
ஆனால், அதிகாரிகள் மற்றும் போலீசார் தாமதமாக வந்து மெத்தனமாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க. சார்பில் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த திலகபாமா, அதிகாரிகள் வந்த தகவல் தி.மு.க.வினருக்கு எப்படி சென்றது, பட்டுவாடாவிற்காக வைத்திருந்த பணம் எவ்வாறு மாயமானது, சம்பவ நேரத்தில் பொறுப்பான அதிகாரி ஏன் இல்லாமல் இருந்தார் என தொடர் கேள்விகளை எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து ஜனநாயகத்தை பாதிக்கின்றனர் என்றும், தேர்தல் கமிஷன் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், வியாசர்பாடி பி.வி.நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரசாரத்தை திலகபாமா தொடங்கினார். பின்னர் சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
