சென்னை: லோக்சபாவில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்பட்டு ஒடுக்கப்படும் அபாயம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில், அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாக வெளிப்படுத்திய அச்சம் தற்போது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். லோக்சபாவில் தமிழகத்தின் தற்போதைய 39 இடங்கள் 58 ஆக உயரும் என்று கூறப்பட்டாலும், அது மாயை என முன்பே கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், 58 ஆகும் என்று கூறப்பட்ட எண்ணிக்கை 46 ஆக குறையும் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போதைய 80 இடங்கள் முதலில் 120 ஆகவும், பின்னர் 140 ஆகவும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவம் 24.3% இருந்து 20.7% ஆக குறையும் என்றும், இதனால் லோக்சபாவில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்பட்டு ஒடுக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
