சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பள்ளி ஆண்டு விழாக்களில், நடிகர் விஜயின் திரைப்பட பாடல்களை தவிர்க்க பள்ளிகள் அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளில், பள்ளி ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளில் விஜய் பாடல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. மாணவர்கள் மத்தியில் அவரது பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால் தற்போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ள நிலையில், சில பள்ளிகள் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டாம் என வழிகாட்டுதல்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள் வட்டாரங்களில் கூறப்படுவதாவது, சில கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விஜய் பாடல்கள் ஒலிக்கும் போது, அவரது கட்சி கொடிகள் காட்டப்படுவதும், கட்சிப் பெயர்கள் கோஷமிடப்படுவதும் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால், பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, விஜய் பாடல்களை தவிர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
