புதுடில்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் 3 லட்சம் சிறுமியர் பயனடைந்துள்ளனர்.
பெண்களிடம் அதிகமாக காணப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.
14 வயது சிறுமியருக்கான இந்த இலவச தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 28ஆம் தேதி ராஜஸ்தானில் துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ‘கார்டசில் 4’ (Gardasil 4) என்ற தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படுகிறது. இது HPV வைரஸ் வகைகளால் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
அரசு சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த திட்டத்திற்கு சிறுமியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, குஜராத், ஒடிஷா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்கள் இந்த முயற்சியில் முன்னிலையில் உள்ளன.
தற்போது பள்ளி தேர்வுகள் நடைபெற்று வந்தாலும், தடுப்பூசி முகாம்களில் நல்ல அளவில் பங்கேற்பு உள்ளது. தேர்வுகள் முடிந்த பின் இந்த திட்டம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த முயற்சியை ஐ.நா. சபையும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
