ஆமதாபாத்: இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான ‘நந்தா தேவி’ கப்பல், 45,000 டன் எரிவாயுவை ஏற்றி ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத்தின் வாடிநார் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்ததோடு, சமையல் எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய கப்பல்களுக்கு அந்த வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு முன் ‘ஷிவாலிக்’ என்ற கப்பல் 45,000 டன் எரிவாயுவுடன் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ‘நந்தா தேவி’ கப்பல் வாடிநார் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
முதலில் இந்த கப்பல் கண்ட்லா துறைமுகத்தை நோக்கி பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னர் வாடிநாருக்கு மாற்றப்பட்டது.
இவ்விரு கப்பல்களும் பொதுத்துறை நிறுவனமான இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமானவை.
மேலும், ‘ஜாக் லாட்கி’ என்ற மற்றொரு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து 81,000 டன் கச்சா எண்ணெயுடன் முந்த்ரா துறைமுகத்தை நோக்கி பயணித்து வருகிறது. கப்பலும், அதில் உள்ள பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
