இஸ்ரேலில் ஆட்சியைத் தக்கவைக்க நெதன்யாகு தீவிர முயற்சி: எதிர்க்கட்சியுடன் கூட்டணி பேச்சு?
ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் மொத்தம் 120 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு குறைந்தது 61 இடங்கள் தேவை.
எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை
தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அதன் தீவிர வலதுசாரிக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 53 இடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டின் யாஷார் கட்சியும், அவரது அணியில் உள்ள மற்ற மூன்று யூதக் கட்சிகளும் சேர்ந்து 48 இடங்களைப் பெற்றுள்ளன. பாலஸ்தீன ஆதரவு அரபுக் கட்சிகளின் கூட்டணி 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதனால் எந்தக் கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு வாய்ப்புகள்
இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டைத் தனது அணியில் இணைத்து தேசிய ஐக்கிய அரசை அமைக்க நெதன்யாகுவின் நெருங்கிய வட்டாரங்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக ‘தி ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
நெதன்யாகுவின் தலைமையிலான அரசில் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என ஐசென்கோட் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், அவரைச் சம்மதிக்க வைக்க இரண்டு முக்கிய வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் வாய்ப்பாக, சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ளும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்சியின் முதல் பாதியில் நெதன்யாகு பிரதமராகவும், அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐசென்கோட் பிரதமராகவும் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வாய்ப்பாக, முழு ஆட்சிக் காலத்திற்கும் நெதன்யாகு பிரதமராகத் தொடர்வதுடன், ஐசென்கோட் அணிக்கு முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த வாய்ப்புகள் குறித்து ஐசென்கோட் இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதாகப் பிரசாரம் செய்துவிட்டு, தற்போது அவருடன் கூட்டணி அமைப்பது அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் முன் உள்ள வாய்ப்புகள்
இஸ்ரேலில் பிரதமர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடிய தலைவரை அதிபர் ஆட்சி அமைக்க அழைப்பார்.
தேர்தலுக்குப் பிறகு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆலோசனை நடத்துவார். பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ள தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பார்.
மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுவதைத் தவிர்க்க, அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வைக் காண வேண்டும் என்றும் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தலில் சர்வதேச சதி நடந்ததாக நெதன்யாகு குற்றச்சாட்டு
இதற்கிடையே, இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளின் கூட்டணி மூலம் குழப்பங்களை ஏற்படுத்த சர்வதேச சதி நடைபெற்றுள்ளதாக பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
அரபுக் கட்சிகளின் கூட்டணி தேர்தல் முறையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், அந்தக் கூட்டணி எவ்வாறு வெற்றி பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நெதன்யாகு கூறியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
