புதுடெல்லி: நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் அதுதொடர்பான மோசடிகளைத் தடுக்க, இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலிக்கு தற்காலிக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் மறு தேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வை வெளிப்படையாகவும், எந்தவித முறைகேடும் இல்லாமலும் நடத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், டெலிகிராம் செயலியில் சில சமூக விரோதிகள், தங்களிடம் நீட் வினாத்தாள் இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி மாணவர்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாணவர்கள் ஏமாறாமல் இருக்கவும், மோசடி குழுக்களை அடையாளம் காணவும் தேசிய தேர்வு முகமை (NTA) மத்திய அரசுக்கு டெலிகிராம் செயலியை தற்காலிகமாக தடை செய்ய பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் கீழ் உத்தரவு பிறப்பித்து, ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
மேலும், குற்றச்செயல்களில் தொடர்புடைய ஆதாரங்கள் அழிக்கப்படாமல் இருக்க, ஏற்கனவே வெளியிடப்பட்ட டெலிகிராம் பதிவுகளை திருத்தும் (Edit) வசதிக்கும் ஜூன் 30-ஆம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
