உச்ச நீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை அமர்வுகளில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கும், வழக்குகளை அவசரமாக பட்டியலிடக் கோருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு இன்று முதல் ஜூலை 12ஆம் தேதி வரை கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர மற்றும் முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான கோடை கால விடுமுறையின் ஒவ்வொரு வாரத்திலும் மூன்று அல்லது நான்கு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
கோடை விடுமுறையின் முதல் நாளில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் ஒருவர் வாதாட முன்வந்தார். அப்போது நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி. வராலே ஆகியோர், புதிய நடைமுறையின்படி மூத்த வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இளம் வழக்கறிஞர்களின் வாதங்களை மட்டுமே கேட்போம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து, புதிய உத்தரவு குறித்து தெரியாத காரணத்தால் அந்த நாளுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், அன்று மட்டும் வாதாட அனுமதி அளித்ததுடன், அடுத்த நாள் முதல் மூத்த வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராகி வாதாடக் கூடாது என்றும் தெளிவுபடுத்தினர்.
எனினும், இளம் வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை மூத்த வழக்கறிஞர்கள் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படாது; கோடை விடுமுறை முடிந்த பின் வழக்கமான அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி சஞ்சய் கரோல் தலைமையிலான மற்றொரு கோடை கால அமர்வும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதித்துறையில் புதிய தலைமுறை வழக்கறிஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நேரடி அனுபவம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
