ஈரானுடன் விரைவில் ஒரு உறுதியான உடன்பாட்டை எட்டுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பாராட்டியுள்ளார். இந்த முயற்சி மத்திய கிழக்கில் நிலையான அமைதிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில், இரு தரப்புக்கும் இடையே அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஈரான் தரப்பில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கிய அமைதி திட்ட முன்மொழிவு அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. இருப்பினும், அந்த முன்மொழிவை அமெரிக்கா ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து டிரம்புடன் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உறுதியான உடன்பாட்டை விரைவாக எட்டுவதற்காக டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டியதாக கூறியுள்ளார். இந்த முயற்சி பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைத்து, நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் அமைதியை வலுப்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பையும் இந்த பேச்சுவார்த்தைகள் வழங்கக்கூடும் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.
