சர்வதேச தடைகளை மீறி ரஷ்யா மற்றும் ஈரானின் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ‘டாகோர்’ என்ற எண்ணெய் கப்பலை பிரான்ஸ் கடற்படை இடைமறித்து கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் சர்வதேச கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ரஷ்ய கப்பற்படையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த கப்பல், சர்வதேச தடைகளை மீறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தடைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதாரமாக செயல்படக்கூடிய எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயல்படும் கப்பல்கள், சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பிரிட்டன் உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் ஆதரவுடன், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரான்ஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
