சென்னை: மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாத நிலையில், காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரி பருவ நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நெற்பயிர் முக்கியமாக சாகுபடி செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுவதுடன், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இதேபோல், டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை திறக்கப்படாத சூழலில் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் பொறியியல் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கிலோமீட்டர் நீளமுள்ள C மற்றும் D வகை வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள A மற்றும் B வகை வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை 97 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
குறுவை சாகுபடிக்காக 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 402 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் தினமும் 18 மணி நேரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்று பயனடையுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
