புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீரரும், புகழ்பெற்ற பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா, மாரடைப்பால் தனது 49வது வயதில் காலமானார்.
இந்தியாவின் தலைசிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர்களில் ஒருவராக விளங்கிய ஜஸ்பால் ராணா, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். மேலும், மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி உள்ளிட்ட பல திறமையான வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளராகவும் அறியப்பட்டார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 15 பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது விளையாட்டு சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசு 1994ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 1997ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2020ஆம் ஆண்டு துரோணாச்சார்யா விருதையும் வழங்கி கவுரவித்தது.
சமீபத்தில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து திரும்பிய ஜஸ்பால் ராணா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை வென்று சிறப்பான சாதனை படைத்திருந்தது.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜஸ்பால் ராணாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் ஸ்டென்ட் பொருத்த வேண்டிய அவசியம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் மேற்கொண்டு கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தார்.
ஜஸ்பால் ராணா மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜஸ்பால் ராணாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், அவரது மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அவர் நிகழ்த்திய சாதனைகள் நாட்டிற்கு பெருமை சேர்த்ததோடு, இளம் வீரர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்திய அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த துயரமான தருணத்தில் ஜஸ்பால் ராணாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினருடன் தனது எண்ணங்கள் இருப்பதாகவும், “ஓம் சாந்தி” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
