பா.ஜ.க. பிரமுகரான அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தனது கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவதூறாகவும், ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் பேசியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
முக்தார் அகமது சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் அரசியல் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை பதிவிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட முக்தார் அகமதுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் தன்மை மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
