என்னை விஜயுடன் ஒப்பிடாதீர்கள்: தொண்டர்களுக்கு பவன் கல்யாண் அறிவுரை
ஹைதராபாத்: தமிழக முதல்வர் Vijay உடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துமாறு ஆந்திர துணை முதல்வரும் Pawan Kalyan ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியலில் புதிய வரவாக களமிறங்கிய விஜயின் தவெக ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அவரின் அரசியல் வளர்ச்சி குறித்து பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஜய் கட்சி தொடங்கிய காலத்தில், நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என விமர்சனங்கள் எழுந்தன. அப்போது சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணுடன் விஜய் ஒப்பிடப்பட்டார்.
ஆனால், பவன் கல்யாண் தனது முதல் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், விஜய் நேரடியாக ஆட்சியை பிடித்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், அரசியல் களத்திலும் விஜயையும் பவன் கல்யாணையும் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்த பவன் கல்யாண், அங்கு கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: “தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் தரப்பில் இருந்து எனக்கு அதிக அழுத்தம் வருகிறது. நமது அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்துள்ளார். அதுபோல் ஆந்திராவிலும் நான் செயல்பட்டிருக்க வேண்டும் என்று பலர் குறுஞ்செய்திகள் அனுப்பி வருகின்றனர்” என்று கூறினார்.
மேலும், “பக்கத்து வீட்டில் திருமணம் நடந்தால், தங்கள் வீட்டில் நடந்தது போல சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோலதான் இது இருக்கிறது. ஆனால் ஆந்திரா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் அரசியல் சூழல் முற்றிலும் வேறுபட்டது” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “2019ஆம் ஆண்டு நான் தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. என்னுடைய அமைச்சர்களே எனக்கு முழுமையான ஆதரவு தரவில்லை. எனவே மற்றவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” என்று பவன் கல்யாண் கூறினார்.
குறிப்பிடத்தக்க வகையில், தொண்டர்களிடம் பேசியபோது அவர் எந்த இடத்திலும் விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “அவர்” என்றே குறிப்பிட்டார்.
