யாரும் சென்றிராத உயரத்தை எட்டியது இந்தியா: நெதர்லாந்தில் மோடி பெருமிதம்
தி ஹேக்: இந்தியா இதுவரை யாரும் சென்றிராத உயரத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் Narendra Modi நெதர்லாந்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியபோது பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நெதர்லாந்து பயணத்தில் உள்ள பிரதமர் மோடிக்கு ஹேக் நகரில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடம் பேசிய அவர், “இந்தியா மற்றும் Netherlands நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை” என்று கூறினார்.
மேலும், “140 கோடி இந்தியர்கள் சார்பில் நெதர்லாந்து மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இங்கு மக்களின் உற்சாகத்தை பார்த்தபோது, நான் நெதர்லாந்தில் இருப்பதையே மறந்துவிட்டேன். இந்தியாவில் ஏதோ ஒரு பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பல துறைகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் சாதனைகளின் காலகட்டத்தை கடந்து வருகிறது. இந்தியா இதுவரை யாரும் சென்றிராத இடத்தை அடைந்துள்ளது. சமீப காலங்களில் உலகின் மிகப்பெரிய ஏஐ தொடர்பான உச்சிமாநாடு மற்றும் ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது” என்றார்.
விண்வெளி ஆய்வில் இந்தியா சாதனை படைத்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார். “நிலவின் தெற்கு துருவத்தை எட்டிய நாடாக இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது” என்றும் தெரிவித்தார்.
மேலும், “உலகளவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அணுசக்தி மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தி துறைகளிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது” என்று கூறினார்.
மே 16ஆம் தேதியின் முக்கியத்துவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். “2014ஆம் ஆண்டு இதே நாளில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல ஆண்டுகளுக்கு பிறகு முழு பெரும்பான்மையுடன் அரசு அமைந்தது. அது எனக்கு மக்களின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமைந்தது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை இந்தியாவிடம் நெதர்லாந்து ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
