அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கமான ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்புக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து இணைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய பாதை, புதிய இயக்கம் மற்றும் புதிய பார்வையுடன் மக்கள் இயக்கத்தை தொடங்க உள்ளதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். மேலும், எதிர்காலத்தில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் தனது இயக்கம் பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த ஜூன் 5 ஆம் தேதி ‘வி தி லீடர்ஸ்’ என்ற பெயரில் புதிய இயக்கத்தை அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். இயக்கம் தொடங்கப்பட்ட உடனேயே உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது.
இயக்கம் தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 1.10 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து ஆதரவு அதிகரித்த நிலையில், அதே நாள் மாலை 7 மணி நிலவரப்படி 7.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி உறுப்பினர் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. காலை 5.50 மணி வரை 11,21,550 பேர் பதிவு செய்து இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு ஏற்கனவே கணிசமான ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது புதிய இயக்கத்திலும் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
