சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லாவிட்டால் அது தீவிரமான விவகாரமாக கருதப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைகோ தாக்கல் செய்த பொதுநல மனுவில், சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீர், காற்றிலுள்ள ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதத்தை அதிகளவில் உறிஞ்சுவதால் வெப்பம் அதிகரிப்பதுடன், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. எனவே, தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு கடந்த மார்ச் 18 ஆம் தேதி, சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என்றும், அகற்றப்பட்ட பகுதிகளில் உள்ளூர் தாவரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மேலும், அடுத்த பருவமழைக்கு முன்பாக இந்தப் பணிகளை நிறைவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமைக்கருவேல மர அகற்றும் பணிகள் தொடர்பாக ஜூலை 10 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
