அமெரிக்கத் தேர்தலில் தொடரும் இந்திய வம்சாவளியினரின் வெற்றி: பியா தாண்டியா சாதனை!
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பியா தாண்டியா வெற்றி பெற்றுள்ளார். புளோரிடா மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 22வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், தனது எதிராளியான முன்னாள் கடற்படை வீரர் கேசே அஸ்காரை எதிர்கொண்டார்.
இந்தத் தேர்தலில் பியா தாண்டியா 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேசே அஸ்கார் 49.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
புளோரிடாவின் 22வது தொகுதி ஜனநாயகக் கட்சிக்கு சவாலான தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தொகுதியில் பியா தாண்டியா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ‘இந்தியன் அமெரிக்கன் இம்பேக்ட்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தன் பட்டேல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த பியா தாண்டியா?
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த தம்பதியருக்குப் பிறந்தவர் பியா தாண்டியா. தனது 28 வயதில் ஏழை மாணவர்களுக்காகப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் இளம் வயதிலேயே உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்று கவனம் பெற்றார்.
கல்வியாளர் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது புளோரிடாவின் புதிய 22வது தொகுதியில் வெற்றி பெற்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இடம்பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியினரின் வெற்றி தொடர்கிறது
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் பல அரசியல் தலைவர்களும் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ளனர்.
வர்ஜீனியாவின் 10வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்பிரமணியம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியாவில் போட்டியிட்ட அமி பேரா வெற்றி வாய்ப்பில் உள்ளார். சிலிக்கான் வேலி தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ரோ கண்ணா முன்னிலை பெற்றுள்ளார்.
வாஷிங்டனில் மீண்டும் போட்டியிட்ட பிரமிளா ஜெயபாலும் முன்னிலையில் உள்ளார். மேரிலாந்து துணை கவர்னராக அருணா மில்லர் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்க செனட் தேர்தலில் முதல்முறை சாதனை
அமெரிக்க செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் ஓரினச்சேர்க்கையாளருமான கிறிஸ் பாப்பாஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூ ஹாம்ப்ஷயர் மாகாண செனட் தேர்தலில் 58.4 சதவீத வாக்குகளைப் பெற்று, அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார்.
