ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: வர்த்தகப் போக்குவரத்துக்கு பச்சைக்கொடி!
தெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் ஏற்படக்கூடும் என்ற பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்கப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் வர்த்தகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அனுமதி
இந்தியாவுடன் சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்நாடு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த நான்கு நாடுகளின் வர்த்தகக் கப்பல்களும் போர் அச்சுறுத்தல் இன்றி ஜலசந்தியைக் கடந்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கட்டணம் விதிப்பு
இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணை இயக்குநர் அமீர் ஹயாத் மொகாதம் கூறுகையில், இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்களும் போர் அச்சுறுத்தல் இன்றி பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான், இந்தியா மற்றும் சீனக் கப்பல்களுக்கு போக்குவரத்துக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், கத்தார் நாட்டுக் கப்பல்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
