மின் சேமிப்பு திறனை அதிகரிக்க ரூ.14,500 கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதுடில்லி: நாடு முழுவதும் கூடுதலாக 92,000 மெகாவாட் மின் சேமிப்பு திறனை உருவாக்குவதற்காக ரூ.14,500 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், லித்தியம், நிக்கல் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை உள்நாட்டிலேயே பிரித்தெடுத்து சுத்திகரிப்பதற்காக ரூ.2,814 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5 ஆண்டுகளில் மின் சேமிப்பு கட்டமைப்பு மேம்பாடு
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மின் சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.97,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உருவாக்கப்படும் புதிய மின் சேமிப்பு திறன், தற்போதைய திறனைவிட 170 சதவீதம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தைச் சேமித்து, மின்சாரத் தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்த இத்திட்டம் உதவும். இதனால் மின் விநியோகத்தின் நிலைத்தன்மை மேம்படுவதுடன், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கவும் வழிவகுக்கும். மேலும், வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதும் குறையும்.
லித்தியம், நிக்கல் ஆலைகளுக்கு ரூ.2,814 கோடி
முக்கிய கனிமங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் தொழில்துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்காக, 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்து நிதியாண்டுகளுக்கு ரூ.2,814 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் இரண்டு லித்தியம் ஆலைகள் மற்றும் இரண்டு நிக்கல் ஆலைகள் என மொத்தம் நான்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் முக்கிய கனிமங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டுத் தொழில்துறையை வலுப்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
