கோபுரத்தைச் சுத்தம் செய்ய நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியதால் சர்ச்சை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரத்தைச் சுத்தம் செய்யும் பணியில், இறைவன் திருவீதியுலா வரப் பயன்படுத்தப்படும் நந்தி வாகனத்தைத் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தியதற்கு இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நந்தி வாகனத்தைப் பயன்படுத்த எதிர்ப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிக்குத் தீயணைப்பு வாகனம் அல்லது ஏணியைப் பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுடனும் வழிபாட்டு மரபுகளுடனும் தொடர்புடைய சிவபெருமானின் நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோபுரத்தைச் சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், அரசு துறைகளின் அலட்சியம் மற்றும் நிர்வாக வசதிக்காக பக்தர்களின் இறைநம்பிக்கையைப் புறக்கணிப்பது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவில் நிர்வாகத்துக்கு கோரிக்கை
இந்தச் சம்பவத்துக்காக கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் கோவில் வாகனங்கள் ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாகப் பயன்படுத்தப்படாது என அறநிலையத்துறை உறுதியளிக்க வேண்டும் என்றும், கோவில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
