சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி: மாயமான 41 ஆவணங்கள் குறித்து விரிவான அறிக்கை கோரிக்கை!
புதுடில்லி: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாயமான ஆவணங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
41 முக்கிய ஆவணங்கள் மாயம்
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான அரிய ஐம்பொன் சிலைகள் மற்றும் கற்சிலைகள் கடத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்குகள் தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆரம்பத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டது.
பொன். மாணிக்கவேல் ஓய்வுபெற்ற பின்னர் பொறுப்புகள் மாறியபோது, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், சாட்சியங்களின் விவரங்கள், வழக்கின் முக்கிய கோப்பான ‘கேஸ் டைரி’ உள்ளிட்ட 41 ஆவணங்களும் டிஜிட்டல் குறுந்தகடுகளும் காவல் துறை அலுவலகத்தில் இருந்து மாயமானதாகப் புகார் எழுந்தது.
சிலை கடத்தல் கும்பலுக்கும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை மறைக்கவே ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், பொன். மாணிக்கவேல் ஓய்வுக்குப் பிறகு ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களே ஆவணங்கள் மாயமானதற்குக் காரணம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான 41 ஆவணங்கள் மாயமானது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். சில டிஜிட்டல் குறுந்தகடுகள் எதிர்பாராத தீ விபத்தில் அழிந்துவிட்டதாகவும், இதுவரை 21 பழமையான சிலைகள் மீட்கப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுதந்திரமான விசாரணை கோரி மனுதாரர் வாதம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பு, சிலை கடத்தல் வழக்கின் முழு விவரங்களையும் கொண்ட ‘கேஸ் டைரி’ மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து உயர் பதவிகளில் இருப்பதால் உண்மைகள் மறைக்கப்படுவதாகவும், விசாரணை பெயரளவில் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியது. எனவே, மாயமான ஆவணங்களைக் கண்டறிய சுதந்திரமான சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
தமிழக அரசின் விசாரணைக்கு நீதிபதிகள் அதிருப்தி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 21 சிலைகள் யாரிடம் இருந்து மீட்கப்பட்டன, அவை தற்போது எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மாயமான ஆவணங்களை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த அறிக்கையில் மீட்கப்பட்ட சிலைகள் தொடர்பான முழு விவரங்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் மீட்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
