மதுரை: மாணவர்கள் விபூதி, குங்குமம் அணிந்து பள்ளிக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் செயல்களைத்தான் தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். சில பணியிடங்கள் தொடர்பான விவகாரங்கள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், மற்ற பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், அவர் ஆற்றல் மிக்கவர் என்றும், அவரது செயல்பாடுகளை சிலர் விமர்சிப்பது அரசியல் காரணங்களால் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர், திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மாணவர்களிடம் குறைகள் இருந்தால் நேரடியாக தனது பெயருக்கு கடிதம் எழுதலாம் என்றும், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘ஜாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளீர்களே?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சில மாணவர்கள் கைகளில் ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பேண்ட் கட்டி வருவதாகவும், வெளியில் இருந்து சிலர் ஜாதி உணர்வைத் தூண்டுவதாகவும் கூறினார். அதனால்தான் அந்தக் கருத்தை தெரிவித்ததாக விளக்கமளித்தார்.
மேலும், “நானே விபூதி, குங்குமம் அணிந்துதான் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லுகிறேன். மாணவர்களும் விபூதி, குங்குமம் அணிந்து பள்ளிக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை,” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தினார்.
