வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும், அங்கு அமெரிக்க கடற்படை மேற்கொண்டிருந்த முற்றுகை உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் அமைதியை ஏற்படுத்த பல அமெரிக்க அதிபர்கள் முயன்ற போதிலும் வெற்றி பெறவில்லை என்றும், தற்போது அந்த இலக்கு நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து மற்றும் விநியோகம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதனுடன், அந்தப் பகுதியில் அமெரிக்க கடற்படை விதித்திருந்த முற்றுகையும் உடனடியாக நீக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் நடைபெற்று வந்த இராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த இரு தரப்பும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்
