சென்னை: போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் குறைந்த விலைக்கு தங்கக் காசுகள் வழங்குவதாக கூறி, சுமார் ₹20 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராயபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபுமணி, ‘விநாயகம் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, குறைந்த விலைக்கு தங்கக் காசுகள் வழங்கும் முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண் இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீசாக பணியாற்றும் அவரது மனைவியும் இணைந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு செயலி மூலம் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் முதலீடுகளை சேகரித்துள்ளனர்.
இந்த திட்டத்தில் அப்போது திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த ஷீலா மேரியும் இணைந்ததாக கூறப்படுகிறது. அவரது பரிந்துரையால் துணை கமிஷனர் நிலை அதிகாரி உள்ளிட்ட பலரும் முதலீடு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஷீலா மேரி மற்றும் பிரபுமணி இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திட்டத்தில் முதலில் இணைந்த இன்ஸ்பெக்டர், அவரது மனைவி மற்றும் ஷீலா மேரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதலீடு செய்த போலீசார் புகார் அளிக்கத் தொடங்கிய நிலையில், சென்னை மாநகர போலீசாரும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், பிரபுமணி மற்றும் ஷீலா மேரி இணைந்து சுமார் ₹20 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுமணியை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியை பணியிடை நீக்கம் செய்து, சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
