கோவை,
“வடக்கிலிருந்து வரும் தாக்கத்தை தடுக்க வேண்டும்; தமிழகத்தில் மிரட்டல் அரசியல் ஏற்கப்படாது” என்று ம.நீ.ம. தலைவர் கமல் ஹாசன் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அவர் பேசியதாவது: கோவையில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோமீட்டர் நீள ஜி.டி. பாலம் வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக உள்ளது. ஆனால் மத்திய அரசு மக்கள் தேவைகளை புறக்கணித்து, தங்களுக்கு சாதகமான பகுதிகளுக்கு மட்டுமே மெட்ரோ திட்டங்களை வழங்குகிறது என்றார்.
வடக்கிலிருந்து அரசியல் அழுத்தம் மற்றும் தலையீடு நடைபெறுகிறது என்றும், அதனை தமிழக மக்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திமுகவை எதிர்க்கும் அரசியல் சக்திகளுக்கு பின்னால் வட இந்திய ஆதிக்கம் உள்ளது என்றும், அவர்கள் அனுமதியுடன் சிலர் செயல்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், வெளிமாநில தலைவர்கள் தமிழகத்தில் வந்து வாக்குறுதிகள் வழங்குவது குறித்து அவர் விமர்சனம் மேற்கொண்டார். இது ஜனநாயக முறைக்கு ஏற்றதல்ல என்றும், தமிழகத்தில் இத்தகைய அழுத்த அரசியல் இயங்காது என்றும் கூறினார்.
தமிழர்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றாலும், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் உரிமைகளை பாதுகாப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் மக்கள் தங்கள் முடிவை தெளிவாக வெளிப்படுத்துவார்கள் என்றும், கோவை தெற்கு தொகுதியில் மாற்றம் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக தாம் போட்டியிட்ட தொகுதியான கோவை தெற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் தமக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் கோவை ஒரு முக்கிய மையமாக உருவாகும் என்றும், திமுகக்கு சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்று கோவையிலும் வலுவான அடித்தளம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
