விழுப்புரம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும், அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், நாகர்கோவிலில் ஸ்டாலின் தன்னை குறித்து கூறிய கருத்துகளுக்கு பதிலளித்தார்.
தன்னை திண்ணையில் கிடந்தவர் என கூறியதை சுட்டிக்காட்டிய இபிஎஸ், “வாய், நாக்கு இருந்தால் எது வேண்டுமானாலும் பேசிவிடலாமா? எங்களுக்கு பேச தெரியாதா? எங்களுக்கு நாக்கு இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “முதல்வராகவும், கட்சி தலைவராகவும் இருப்பவர் பொறுப்புடன் பேச வேண்டும். பொறுப்பின்றி பேசினால் அதை எங்கள் தொண்டர்கள் கூட ஏற்கமாட்டார்கள்,” என்று தெரிவித்தார்.
தான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவன் என்றும், அதனை குறைத்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
மேலும், தனது கட்சி நிர்வாகிகள் குறித்து எழுந்த விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காத நிலையில், மற்றவர்களை விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“முதல்வருக்கு நாவடக்கம் அவசியம். அரசியல் மரியாதையுடன் பேச வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
