புதுச்சேரி: ஸ்டாலின் புதுச்சேரியில் மக்களுக்கு நன்மை செய்ய அல்ல, நிதியை சுரண்ட வருகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியின் எம்.ஜி. ரோடு, புஸ்ஸி தெரு மற்றும் அண்ணா திடல் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசினார்.
அப்போது, “ஸ்டாலின் நாளை பிரசாரத்துக்கு வருகிறார். தமிழகத்தில் நடந்ததைப் போலவே இங்கும் கொள்ளையடிக்க வருகிறார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிக அளவில் ஊழல் மற்றும் மதுபான விற்பனை நடைபெறுகிறது என்றும், அதே நிலையை புதுச்சேரியிலும் உருவாக்க முயற்சி செய்யப்படலாம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“மக்களுக்கு நன்மை செய்ய அல்ல, நிதியை சுரண்ட வருகிறார். எச்சரிக்கையாக இல்லையெனில், தமிழகத்தில் உள்ள நிலைமையே இங்கும் ஏற்படும்,” என்று கூறினார்.
மேலும், திமுக ஒரு குடும்பக் கட்சி என்றும், மக்களுக்காக செயல்படவில்லை என்றும் விமர்சித்தார். காங்கிரஸ்-திமுக கூட்டணி குழப்பமான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஒரே கொள்கை என்று கூறி கூட்டணி அமைத்தவர்கள், புதுச்சேரியில் வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், இது இரட்டை நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.
“மக்களை சுரண்டுவதற்காகவே திமுக அரசியல் செய்கிறது,” என்று கடுமையாக தாக்கினார்.
