புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய (CMA) கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் காவிரி நீர் பகிர்வு விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) கூட்டத்தில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறந்து விடவும், மாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் அந்த நீர் சென்றடைவதை உறுதி செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, மழை குறைவால் குடிநீர் தேவையே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு நீரை திறக்க இயலாது என்றும் தெரிவித்தது. மேலும், இந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆலோசனையின் முடிவில், ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும், இரு மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
