தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் சென்னையில் இன்று காலை தொடங்கியது. கூட்டம் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் சமீபத்தில் எழுந்திருந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முழுமையான சட்டப்பேரவை கூட்டத்தொடராக இது அமைந்துள்ளது. கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். பின்னர், அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார்.
ஆளுநர் உரையில் அரசின் புதிய கொள்கைகள், நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. உரைக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத்தொடரின் கால அளவை முடிவு செய்ய உள்ளது. இந்த கூட்டத்தொடர் 3 முதல் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர். கூட்டத்தொடரின் இறுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்குவார்.
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
