இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்தாண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என ஐரோப்பிய யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுடன் மிக முக்கியமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தாண்டு இறுதிக்குள் முறைப்படி கையெழுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான பணிகளும் விரைவுபடுத்தப்படும் என்றும், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) திட்டத்தை இணைந்து முன்னெடுக்க இருதரப்பும் உறுதி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
