பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணிக்காக விளையாடும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சாமுவேல் முத்துசாமி கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்திய அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வீரர்கள் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெற்று வரும் 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு நாடுகளின் அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் நிஷான் வேலுப்பிள்ளை உலகக் கோப்பையில் விளையாடிய முதல் தமிழ் வம்சாவளி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது தந்தை இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூசிலாந்து அணிக்காக சுர்ப்ரீத் சிங் மற்றும் கத்தார் அணிக்காக துஷீன் முகமது ஜம்ஷித் ஆகியோரும் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து, காங்கோ அணியின் நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமியும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவராக கவனம் பெற்றுள்ளார். 1996-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரீசில் பிறந்த அவரின் தந்தை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரும், தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவரும் ஆவார்.
சிறுவயதிலிருந்தே கால்பந்தில் ஆர்வம் கொண்ட சாமுவேல் முத்துசாமி, பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடிய பிறகு, 2019-ஆம் ஆண்டு காங்கோ தேசிய அணியில் இடம்பிடித்தார். பின்னர் ஆப்ரிக்கக் கோப்பை தொடரிலும் இடம்பெற்ற அவர், தற்போது உலகக் கோப்பை தொடரில் காங்கோ அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
