தூத்துக்குடி,
தமிழகத்தையும் அதன் மக்களையும் பாஜ கட்டுப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல், தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
தொடக்கமாக, விருதுநகரில் நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான வரலாறு, பண்பாடு, மொழி உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை உள்ளது. மாநிலங்களின் சுயமரியாதையும் அடையாளமும் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது.
இந்த தேர்தல் கொள்கை ரீதியான மோதலாக உள்ளது. ஒரு புறம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக–காங்கிரஸ் கூட்டணி உள்ளது. மறுபுறம் அதிமுக–பாஜ கூட்டணி உள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு திராவிடம் மற்றும் தமிழ் மொழிக்கு எதிரானது என்றும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற எண்ணத்தை திணிக்க முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
அதிமுக குறித்து பேசுகையில், அந்தக் கட்சிக்கு தனித்த வரலாறு இருந்தாலும் தற்போது அதன் அடையாளம் மாறிவிட்டதாகவும், அதன் மீது பாஜ முழு கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பீஹார் மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை எடுத்துக்காட்டாக கூறிய அவர், அதேபோன்ற சூழலை தமிழகத்திலும் உருவாக்க பாஜ முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய அரசின் மீது விமர்சனம் மேற்கொண்ட அவர், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு தலைவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார் என்றும் கூறினார்.
தமிழகம் சமூக நீதி, கல்வி மற்றும் சமத்துவத்தின் முன்னோடியாக உள்ளது என்றும், காமராஜர் கொண்டு வந்த கல்வி மற்றும் மதிய உணவு திட்டங்களை நினைவுகூர்ந்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜ பாதித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்கள் கூட்டணி ஏழை மக்களை உயர்த்தும் திட்டங்களை செயல்படுத்தும் என்றும், பெண்களுக்கு சொத்து வாங்கும் போது பதிவு கட்டண தள்ளுபடி, நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், அரசு காலியிடங்களை நிரப்புவோம் என்றும், தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க டில்லியில் இருந்து போராடுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
