தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறைகளின் தலைமை பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பிரபு சங்கர் சுரங்கத் துறை இயக்குநராகவும், ஜெயசீலன் சுற்றுலாத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகாஷ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், நிஷாந்த் கிருஷ்ணா மதுரை மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
பொன்மணி அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராகவும், இன்னசென்ட் திவ்யா கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கவிதா ராமு டுபிட்கோ (TIDCO) மேலாண் இயக்குநராகவும், மோகன் பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
ஸ்ரேயா சிங் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகவும், ரமண சரஸ்வதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற நிஷாந்த் கிருஷ்ணா, ஒரே நாளில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
