சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகின் மிக உயரமான போர்க்களமாகக் கருதப்படும் சியாச்சின் பனிச்சிகரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் ராணுவ மோப்ப நாய் தனது பயிற்சியாளரின் அசைவுகளைப் பின்பற்றி யோகா செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பனி சூழ்ந்த சியாச்சின் சிகரங்களில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்வில், ராணுவ வீரர்களுடன் மோப்ப நாயும் பயிற்சியில் பங்கேற்றது. பயிற்சியாளரின் யோகா அசனங்களைப் பார்த்து அதேபோல் செய்து காட்டிய மோப்ப நாயின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், சவாலான இயற்கை சூழலிலும் உடல் மற்றும் மன நலனை பேணுவதன் அவசியத்தை இந்த யோகா நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. மேலும், சகிப்புத்தன்மை, ஒழுக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
