பல மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பிரகாஷ் ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய தேர்தல் விதிகளின்படி, ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் திலீப் குமார் கடந்த 2019-ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடவடிக்கை எடுக்கப்படாததால், பெங்களூரு 48-வது கூடுதல் ஏ.சி.எம்.எம். நீதிமன்றத்தை அவர் அணுகினார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் பிரகாஷ் ராஜ் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
