சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 40 நாட்களாக தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களிடமும் ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
அவர் கூறுகையில், சில எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஒரு எம்எல்ஏ அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பல தவெக எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக தரப்பில் இருந்து பேரம் பேசப்படாத தவெக எம்எல்ஏக்கள் யாரும் இல்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் திமுகவுடன் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெக எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முடியாது என்றும், அவர்கள் குறைந்த செலவில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர்கள் என்றும் நிர்மல்குமார் கூறினார். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பேரம் பேசியவர்களுக்கு கரூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பேரம் பேசியதற்கான ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும் என்றும், தவெகவில் சேருபவர்கள் தொடர்பான வழக்குகளில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
