தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவர் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவை கட்சி மாறச் செய்ய சிலர் பணப் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சென்னை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இவர், ‘லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்’ என்ற பெயரில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு அளித்த தகவலின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக இணைந்து முயற்சி மேற்கொள்வதாகவும், அந்தக் கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
