மத்திய அமைச்சரவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மொத்தம் ரூ.14,115 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில், உத்தரப் பிரதேசத்தில் கான்பூர்–கப்ராய் இடையே ரூ.7,145 கோடி செலவில் 4/6 வழிச்சாலையுடன் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை லக்னோ, கான்பூர், கப்ராய், சாகர், போபால் வழியாக மும்பை நோக்கி செல்லும் முக்கிய இணைப்பாக அமையும். இதன் மூலம் கான்பூர், கடம்பூர், ஹமீர்பூர், கப்ராய் உள்ளிட்ட பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டெல்லியில் துவாரகா அதிவேக நெடுஞ்சாலையையும் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள நெல்சன் மண்டேலா மார்க்கையும் இணைக்கும் வகையில் 8.1 கிலோமீட்டர் நீளமுள்ள 6 வழி சுரங்கப்பாதை அமைக்க ரூ.6,969 கோடி ஒதுக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே ஆறு வழிச்சாலை கட்டமைப்புகளை உருவாக்குவது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலாக உள்ளது என்றார். 2047-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை மனதில் வைத்து அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும் திட்டமிடப்பட்டு வருவதாகவும், வலுவான அடித்தளத்துடன் உருவாக்கப்படும் திட்டங்கள் எதிர்கால விரிவாக்கங்களை எளிதாக்கும் என்றும் தெரிவித்தார்.
