திருத்துறைப்பூண்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச் செயல்களைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதன் முதன்மை பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, மக்களை ஆளுங்கட்சி நிர்வாகிகளிடமிருந்தே பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், முதல்வர் விஜய் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகப் பணிகளை மேற்கொள்வதாக கூறி, அந்த நேரத்தில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.
அதேநேரத்தில், உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கும் முடிவில் முதல்வர் விஜய் இருப்பதாகவும் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், திருத்துறைப்பூண்டி சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், பெண்களை மதிக்கும் பண்பையும், ஒழுக்கத்தையும் கட்சி நிர்வாகிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
