ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகவும் நல்ல செய்தியாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்த நிலையில் தற்போது சுமார் 80 டாலராக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு குறைவதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் சாதகமான சூழல் உருவாகும் என்றார்.
மேலும், இந்திய தொழில்துறைகள் இனி ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்துடன் செய்யப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் முழுப் பலனையும் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வாக இருந்திருந்தால், இந்த வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் வரி சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
சமீப காலங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மட்டுமின்றி, அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் பல ஆசிய நாடுகளின் நாணயங்களும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும், ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் காரணமாக, வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை அனந்த நாகேஸ்வரன் வெளியிட்டார்
