புதுடெல்லி: இளைஞர்கள் யோகாவை ஆர்வத்துடன் கற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு உலக நாடுகள் தயாராகி வரும் நிலையில், ஸ்லோவாக்கியாவின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியுடன் இணைந்து, அந்நாட்டு பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், “ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டதை நானும் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியும் மகிழ்ச்சியுடன் கண்டோம். சர்வதேச யோகா தினத்தை உலகம் எதிர்நோக்கி இருக்கும் இந்த நேரத்தில், இளைஞர்கள் யோகாவை விரும்பி கற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதோடு, உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா திகழ்வதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
