கொல்கட்டா: கமிஷன் மற்றும் ஊழல் அரசியலால் இளைஞர்களின் எதிர்காலத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் அரசு விளையாடி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூச்பெஹார் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னர் வேலை தேடி மக்கள் வந்த மாநிலமாக இருந்த மேற்கு வங்கம், தற்போது சட்டவிரோத குடியேற்றங்களுக்கு மையமாக மாறிவிட்டதாகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தை பாதித்துள்ளதாகவும், அதன் தாக்கம் இளைஞர்களின் எதிர்காலத்திலும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், 2029ஆம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரசின் அரசியல் நடவடிக்கைகள் மாநிலத்தின் அடையாளத்தை மாற்றி வருவதாகவும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்படும் என்றும், ஊழல் மற்றும் கமிஷன் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் மோடி உறுதியளித்தார்.
