சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையில் நான்கு முக்கிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் வேட்புமனுவை கடந்த மார்ச் 30ஆம் தேதி தாக்கல் செய்த அவர், அதனைத் தொடர்ந்து தனது பிரசாரத்தையும் தொடங்கினார்.
பின்னர் கொளத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் அதிகரித்ததால், வில்லிவாக்கத்தில் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய நான்கு பகுதிகளில் பிரசாரம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த பகுதிகள் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் என்பதால், தேர்தல் ஆணையமும் சென்னை காவல்துறையும் சில விளக்கங்களை கேட்டிருந்தன.
அதன்படி, தேவையான கட்டுப்பாடுகளுடன் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் பிரசாரம் செய்யவும் விஜய் அனுமதி கோரியுள்ளார். அனுமதி கிடைத்தால் ஏப்ரல் 7 அல்லது 8ஆம் தேதிகளில் அங்கு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
