ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சியின் நிவரான்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து, போலீசார் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ஒருவரான சயீப், காவல் நிலையத்தில் கழிப்பறைக்கு செல்வதாகக் கூறி ஜன்னலை உடைத்து தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அவரை சன்ஹோ சுங்கச்சாவடி அருகே போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
அவரை கைது செய்யும் போது போலீசாரின் துப்பாக்கியை பறித்து சயீப் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுத்த போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராஞ்சி மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
