சென்னை: பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் அகமது ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியைச் சேர்ந்த முக்தார் அகமது, ‘மை இந்தியா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் குறித்து அவதூறாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் திருச்சி சூர்யாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் பேரில், சென்னை சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதலில் திருச்சி சூர்யா (33) மற்றும் முக்தார் அகமது (48) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, இருவரும் மீது அவதூறு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
