விருதுநகரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வெளிநாட்டு பயணம் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது தொடர்பாக தவறான பிம்பம் உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திட்டப் பணிகள் தாமதமாவதற்கு விரிவாக்கம் மற்றும் திட்டமிடலில் உள்ள சிக்கல்களே முக்கிய காரணம் என்றார். அனைத்து பணிகளும் 2027 ஜனவரிக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வந்தே பாரத் ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் வழங்கப்பட்டால் பயணிகள் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறினார். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வென்டிங் மெஷின்கள் மற்றும் ரயில் ஒன் செயலி மூலம் பெற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள், ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்து வருவதால், கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு அளிக்கும் மதிப்புக்கு ஏற்ப தாங்களும் மதிப்பு அளிப்போம் என்று அவர் கூறினார்.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் தென்கொரியா பயணம் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது குறித்து சிலர் தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், த.வெ.க. அரசு அமைந்து 30 நாட்களே ஆன நிலையில், துறைகளின் மேம்பாட்டிற்காக அமைச்சர் கீர்த்தனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை, 2027 ஜனவரி 1 முதல் “அரை மீசை பாரதி” என அழைக்கப்படுவார் என விமர்சித்த மாணிக்கம் தாகூர், அகங்காரம் மற்றும் ஆணவத்திற்கே மக்கள் பதிலளித்துள்ளதாக கூறினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தி.மு.க.வினரிடம் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் த.வெ.க. அரசு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் என்றும், மின்வாரிய ஊழல் மற்றும் அலுவலக திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
